Month: March 2019

விருதுநகர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.28 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்தூரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.28 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நகைகளை கொண்டு சென்ற தங்க நகை ஏஜென்சியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 8000 கனஅடி நீா் திறப்பு

சேலம்: சேலம் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 8000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிர் இருந்து கூடுதல் நீரி திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 63.82 அடி, நீர்இருப்பு 27.61 டிஎம்சி, நீர்வரத்து வினாடிக்கு 36 கனஅடியாக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது கரூர் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார்

கரூர்: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது கரூர் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக முகிலனுடன் போராட்டங்களில் பங்கெடுத்த பெண் புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது 3  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பிப்ரவரி 15ஆம் தேதி காணாமல்போன நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

சேலம்: சேலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் மகள் ரம்யாவை கொலை செய்தபின் பெற்றோர் ராஜ்குமார், சாந்தி தற்கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது. தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி விசாரித்ததில் உண்மை தெரியவந்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று தமிழகம், புதுச்சேரியில் வருமான வரி அலுவலகங்கள் செயல்படும்

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று தமிழகம், புதுச்சேரியில் வருமான வரி அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது. மேலும் 2018-2019 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – மதுரை வரும் இன்டிகோ விமானத்தில் போராட்டம் நடத்திய 8 பேர் கைது

மதுரை : சென்னையிலிருந்து மதுரை சென்ற தனியார் விமானத்தில் போராட்டம் நடத்திய பாரதிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக் கோரி சென்னை – மதுரை வரும் இன்டிகோ விமானத்தில் 12 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முத்தலாக் அவசர சட்டப்பிரிவுகளை எதிரான மனு மீதான விசாரணை ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி : முத்தலாக் அவசர சட்டப்பிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ஷரியத் சட்டப்பட்டி திருமணம் என்பது உரிமையியல் சம்மந்தப்பட்டது; இதை குற்றமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்று மனுதாரர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்படுகிறது.

ஐபிஎல் 2019 : மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு

மொகாலி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் பஞ்சாப் – மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 13 தனிப்படைகள் அமைப்பு

கோவை : கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கபப்ட்டுள்ள நிலையில் தேடுதலில் முன்னேற்றம் இல்லாததால் 3 கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் கத்திமுனையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

காஞ்சிபுரம் : மதுராந்தகம் புறவழிச்சாலையில் தமிழ்மாறன் என்பவரிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ், கார்த்திக், பெலிக்ஸ் ஆகியோரை கைது செய்து மதுராந்தகம் போலிஸ் சிறையில் அடைத்தது.

பாகிஸ்தானுக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டது யார்? பிரதமருக்கு பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி: பாகிஸ்தானுக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டது யார் என்று நரேந்திர மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். எந்த தொகுதியிலும் தான் போட்டியிட தயார் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அறிவித்துள்ளார். நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கூட போட்டியிட தயார் என்று அவர் கூறியுள்ளார்.

வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள்..வாகன ஓட்டிகளுக்கு இருக்கரம் கூப்பி உயர்நீதிமன்றம் வேண்டுகோள்

சென்னை: வாகனத்தை கவனமாக ஓட்டுமாறு வாகன ஓட்டிகளுக்கு இருக்கரம் கூப்பி சென்னை உயர்நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுவதால் சாலையில் செல்வோரின் உயரிருக்கு ஆபத்து ஏற்படுவதாக நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் கூறியுள்ளனர். இதையடுத்து, கிருஷ்ணகிரியில் பஸ் மோதி இறந்த ரகு குடும்பத்தாருக்கு ரூ.25.30 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஓ.பி.எஸ். பிரச்சார கூட்டத்துக்காக ஆட்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே ஓ.பி.எஸ். பிரச்சார கூட்டத்துக்காக ஆட்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கோவை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் முள்ளாங்காடு வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். குமாரசாமி(60) குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்ற போது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை: கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா பிரச்சினையில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தியின் 3 நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்த்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மதுரையில் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

மதுரை : மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நடைபயிற்சியின் போது மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.