கல்வி நிறுவனங்களில் பெண்கள் முகத்தை முழுதும் மூடும் புர்காவுக்குத் தடை : கேரள முஸ்லிம் கல்விக்கழகம் உத்தரவு

தங்கள் நிறுவன பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் புர்கா உடை அணிய தடை விதித்து கேரளா முஸ்லிம் எஜுகேஷன் சொஸைட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து இலங்கையில் தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இந்தியாவிலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கவேண்டும் என்று சிவசேனாவின் சாம்னா பத்திரிகை கோரிக்கை விடுத்திருந்தது.

ராவணனின் இலங்கையில் தடை விதித்துவிட்டார்கள். அடுத்தது ராமன் பிறந்த அயோத்தியில் இத்தடை எப்போது அமலுக்கு வரும்? என்று  சாம்னா தலையங்கத்தில் கேட்கப்பட்டிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி புதன் கிழமை அயோத்தி வருகை தரும் நிகழ்வுக்கு திட்டமிட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்கோரிக்கை வந்த ஒரு நாளில் இன்று கேரளாவில் கல்லூரிகளில் மாணவிகள் புர்காஸ் அணிய தடை விதித்து கேரளா முஸ்லிம் எஜுகேஷன் சொஸைட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கேரள முஸ்லிம் கல்விக் கழகத்தில் 50 பள்ளிக்கூடங்கள், ஏராளமான கல்லூரிகள் உள்ளிட்டு 150 கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இதன்படி தங்கள் சொஸைட்டியின் 150 கல்விநிறுவனங்களிலும் பெண்கள் முகத்தை மூடும் ஆடையை அணிந்துவர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வுத்தரவு அடுத்த மாதம் தொடங்க உள்ள 2019-2020 கல்வியாண்டிலிருந்து உடனடியாக அமலுக்கு வரவேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புர்காவுக்கு தடைவிதிப்பதை தாங்கள் மதப் பிரச்சினையாக பார்க்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொருபக்கம், இந்தியாவிலும் புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறிய சிவசேனாவின் ஊதுகுழலான சாம்னாவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல் ஆணையரிடம் ஏஐஎம்ஐஎம் முஸ்லிம் அமைப்புத் தலைவர் அசாதுதீன் ஓவாய்சி கேட்டுக்கொண்டுள்ளார்.