பாம்புகளுடன் விளையாடிய பிரியங்கா காந்தி: பாம்பாட்டிகளின் குறை கேட்டறிந்தார்

தனது தாய் சோனியா காந்திக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாம்புகளுடன் விளையாடி, பாம்பாட்டிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், அவரின் மகளுமான பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, ஹன்சா கா புர்வா கிராமத்துக்கு இன்று சென்ற பிரியங்கா காந்தி அங்கிருந்த பாம்பாட்டிகளிடம் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் வைத்திருந்த பாம்புகளைப் பார்த்தார். அப்போது திடீரென தரையில் ஊர்ந்து சென்ற கரு நாகப்பாம்பைஎடுத்து கையில் வைத்துக்கொண்டு அதனுடன் விளையாடினார்.

 

காங்கிரஸ் தொண்டர்களும், பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பாக வந்திருந்த பாதுகாவலர்களும் பாம்பைப் பார்த்து பயந்தநிலையில், பிரியங்கா காந்தி துணிச்சலாக பாம்புகளை கையில் பிடித்து விளையாடினார்.

இதுகுறித்து பாம்பாட்டி கிஷோரி லால் கூறுகையில், ” என்னுடைய கிராமத்துக்கு இப்போதுதான் முதல் முறையாக பிரியங்கா காந்தி வந்துள்ளார், மிகத்துணிச்சலாக பாம்புகளை பிடித்து விளையாடியுள்ளார். நாங்கள் பாம்புகளை வெளியை எடுத்துக் காட்டும்போதெல்லாம் நாங்கள் பணத்துக்காக செய்கிறோம் என நினைத்தார்கள். ஆனால், பிரியங்கா பயமின்றி நாங்கள் வளர்க்கும பாம்புகளை நாய்க்குட்டிகள் போல் பிடித்து விளையாடினார் ” எனத் தெரிவித்தார்.