அசத்திய அர்னால்டுகள்!- கோவையில் தேசிய ஆணழகன் போட்டி

ஹாலிவுட் நடிகர், கலிபோர்னியா மாகாண கவர்னர், உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருப்பவர் என்றெல்லாம் பல பெருமைகளுக்கு உரியவர் அர்னால்டு. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தது அவரது உடற்கட்டு. பலமுறை உலக ஆணழகன் பட்டங்களை வென்றவர் அர்னால்டு. இதேபோல, கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் அசத்தினார்கள் உள்ளூர் அர்னால்டுகள்!

கோவை திருமலையம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,  தேசிய அளவிலான ஆணழகன் போட்டி ‘இந்தியா கப் 2019’  அண்மையில் நடைபெற்றது. நேரு கல்விக் குழுமம், இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் மற்றும் தேசிய அமெச்சூர் ஆணழகன் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தப்போட்டிகள், சீனியர், மாஸ்டர், ஜூனியர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள்  என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி, மணிப்பூர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

போட்டி தொடக்க விழாவில், நேரு கல்விக்   குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலருமான பி.கிருஷ்ணகுமார், மக்கள் தொடர்பு இயக்குநர் அ.முரளிதரன்,  உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார், உடற்பயிற்சி இயக்குநர் எஸ்.மாரிமுத்துகுமார், இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் தலைவர் எஸ்.எஸ்.விஷ்ணு, செயலர் ஜெகநாதன், கோவை மாவட்ட பளுதூக்கும் சங்கச் செயலர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டு நாள் நடைபெற்ற போட்டியில்,  `மாஸ்டர் 40 பிளஸ்’ பிரிவில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் மன்னா, ஒடிசாவைச் சேர்ந்த தியாகராயா, தமிழகத்தைச் சேர்ந்த  மல்லேஸ்வரன் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

சூப்பர் பாடிபில்டிங் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த  எஸ்.எம்.ராகுல், விஷ்ணு ராஜ், ரொசாரியா ஜான்முத்து ஆகியோரும், பாடிபில்டிங் அத்லெடிக் பிரிவில் கர்நாடகாவின் ஷேக் நிஜாம், ஒடிசாவின்  பரோத் சபாதி ஜானா, தமிழகத்தின் சூர்யா ஆகியோரும், பாடிபில்டிங் ஃபிட்னஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தீனன், விக்னேஸ்வரன் ஆகியோரும், பாடிபில்டிங் பர்ஃபார்மென்ஸ் பிரிவில் தமிழக வீரர்கள்  பிரதீப், அருள் அரவிந்த், கர்நாடகாவின் நூதன் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

பெண்கள் மாம்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சோனா, பாடிபில்டிங் பிரிவில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மவுமிதா ஆகியோர் முதலிடம் வென்றனர்.

ஆண்கள் பர்முடாஸ் பிரிவில் 1.72 மீட்டர் முதல் 1.79 மீட்டர் வரையிலான பிரிவில் கர்நாடகாவைச் சேர்ந்த சாக்கோதரகன், தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுமித் ஆகியோரும், 1.72 மீட்டர் பீலே பிரிவில்  கர்நாடகாவைச் சேர்ந்த நூதன், மேற்குவங்கத்தைச் சேர்ந்த சமர்த்சென், தமிழகத்தைச் சேர்ந்த நித்தின் ஆகியோரும், மாஸ்டர் 50 பிளஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த டேவிட் செந்தில்குமார், மகாராஷ்டிராவைச்  சேர்ந்த விஜய் சாம்பாதின்,  தமிழகத்தைச் சேர்ந்த குணசேகரன் ஆகியோரும், மாஸ்டர் 40 பிளஸ் பிரிவில் மேற்குவங்க வீரர் அம்ரித்மான் லிம்போ, தமிழக வீரர்கள் சந்தோஷ் குமார், தனசேகரன் ஆகியோரும் வென்றனர்.

பர்முடாஸ் முதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த டேனியல் ரெஜினால்டு, கேரளாவைச் சேர்ந்த சித்ரன்தாஸ், தமிழகத்தைச் சேர்ந்த முகேஷ் ஆகியோரும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஒடிசாவைச் சேர்ந்த ஜங்ராம் சமர்தாரி, தமிழகத்தைச் சேர்ந்த தங்கதுரை ஆகியோரும் வென்றனர். இதேபோல,  ஜூனியர் பாடிபில்டிங் பிரிவில் தமிழக வீரர் சாம் எபினேசர் பிரான்சிஸ், கோகுல்நாத் வென்றனர். சாம்பியன் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தோக்லா, தமிழகத்தைச் சேர்ந்த ராகேஷ் ஆகியோர் வென்றனர்.  போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.