அதிமுக ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது: தம்பிதுரை எம்.பி. கருத்து

மக்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது, அதிமுக ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. புனித நீராடினார். பின்னர், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அதிமுக ஆட்சியை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது, இந்த ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது. அதிமுக ஆட்சி மீதமுள்ள 2 ஆண்டுகளை நிறைவு செய்யும். அடுத்து வரும் தேர்தலிலும் வென்று அதிமுக ஆட்சியே தொடரும்.

வாக்கு இயந்திரங்களை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர்த்து அந்த விஷயத்தில் எந்த மாயாஜாலமும் நடப்பதாக நான் நினைக்கவில்லை. தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படும் கட்சியாக அதிமுக இருக்கும். சிலர் அரசியல் செய்வதற்காகவும், விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் இந்த ஆட்சி முடிந்துவிடும் எனச் சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.