அந்நிய செலாவணி மோசடி வழக்கு: விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜராக சசிகலாவுக்கு நீதிமன்றம் அனுமதி

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கேள்வி விசாரணைக்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா காணொலி காட்சி மூலமாக ஆஜராக அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீதும் காணொலிக் காட்சி மூலமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் கேள்வி விசாரணைக்காக சசிகலா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இந்த விசாரணைக்கும் காணொலி காட்சி மூலமாக ஆஜராக அனுமதி கோரி சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் சசிகலா காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராவதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு சசிகலா காணொலி காட்சி மூலமாக ஆஜராக அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணையின்போது அவர் அளிக்கும் பதில்கள் அடங்கிய கோப்புகளை பெங்களூரு சிறைக்கு அனுப்பி கையெழுத்து பெறவும் நீதிபதி உத்தரவிட்டார்.