ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேவை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தல்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேவை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகத்தில், உலக செஞ்சிலுவை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று செஞ்சிலுவைச் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். பின்னர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம், சைக்கிள், செயற்கைக் கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது, ‘‘தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செஞ்சிலுவைச் சங்கம் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் உட்பட பல்வேறு மனிதநேயமிக்க செயல்களை செய்து வருகிறது.

தற்போது, ஏழை, எளிய மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேவை செய்ய மருத்துவர்கள் தாமாக முன்வர வேண்டும்’’ என்றார்.