இந்தியாவை அறிவோம்: ஜார்க்கண்ட்

மாநில வரலாறு

ஒரு மாநிலமாக ஜார்க்கண்ட் 2000-ல்தான் பிரிக்கப்பட்டாலும் தொன்மையான வரலாறு உள்ள பிரதேசம்தான் அது. இங்குள்ள குகை ஓவியங்களே ஜார்க்கண்ட்டின் தொன்மைக்குச் சான்று. வனங்கள் சூழந்த பகுதி என்பதால் பெரிய அளவுக்குப் பேரரசுகளால் இது ஆளப்படவில்லை. மௌரியர்கள், குப்தர்கள் போன்றோர் சிறிது காலம் ஆண்டிருக்கிறார்கள். 13-ம் நூற்றாண்டில் ஒடிஷாவைச் சேர்ந்த ராஜா ஜெய்சிங் தேவ் ஜார்க்கண்ட்டின் மன்னராகத் தன்னை அறிவித்துக்கொண்டதாகக் கதைகள் உண்டு. மாநிலமாகப் பிரிக்கப்படும்வரை பிஹார் மாநிலத்தின் தென்பகுதியாகவே ஜார்க்கண்ட் இருந்துவந்தது. பழங்குடியினப் போராளி பிர்ஸா முண்டாவின் மண் ஜார்க்கண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

புவியியல் அமைப்பு

கிழக்கு இந்தியாவில் உள்ள ஜார்க்கண்ட், நாட்டின் 16-வது பெரிய மாநிலம். பரப்பளவு 79,714 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஜார்க்கண்டின் மக்கள்தொகை 3.29 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 414. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555). இந்துக்கள் 67.8%, முஸ்லிம்கள் 14.05%, கிறிஸ்தவர்கள் 4.3%. உட்பிரிவுகளில் பட்டியலின சமூகத்தினர் 12%, பழங்குடியினரின் மக்கள்தொகை 28%. பிற சமூகத்தினர் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

சமூகங்கள்

‘ஜார்க்கண்ட்’ என்றாலே ‘காடுகளின் நிலம்’ என்று பொருள்! ஆகவே, இங்கு பழங்குடியினரின் சதவீதம் அதிகம். இந்தப் பழங்குடியினரில் முண்டா, ஓராவோன், ஹோ, சந்தால், பஹாரியா, சேரோ, பிர்ஜியா, அசுரா உள்ளிட்ட 32 பிரிவுகள் காணப்படுகின்றன. பழங்குடியினரில் 40%-க்கும் மேற்பட்டோர் படிப்பறிவு பெற்றிருக்கிறார்கள். பழங்குடியினரோடு சேர்ந்து பட்டியலின மக்களின் வாக்கு வங்கியையும் குறிவைத்து ஜார்க்கண்ட்டில் தேர்தல் அரசியல் நடைபெறுகிறது.

ஆறுகள்

வடக்கு கரோ, தெற்கு கரோ, பராக்கர், சங்க், தாமோதர், சுபர்ணிகா, வடக்கு கோயல் ஆகிய நதிகள் பிரதானமானவை. இவை தவிர இருபதுக்கும் மேற்பட்ட ஆறுகள் ஓடுகின்றன.

காடுகள்

ஜார்க்கண்டில் காடுகளின் பரப்பளவு 23,605 சதுர கிமீ. இது அம்மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பரப்பில் கிட்டத்தட்ட 30%. இந்தக் காடுகளில் காப்புக்காடுகள் 18.58%, பாதுகாக்கப்பட்ட காடுகள் 81.28%, வகைப்படுத்தப்படாத காடுகள் 0.14%. 1950-ல் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு இம்மாநிலத்தின் பெரும்பான்மையான வனப்பரப்பு பெரும் நிலச்சுவான்தார்களிடம் இருந்தது.

 

நீராதாரம்

மைத்தோன் அணை, கண்டோலி அணை, சரோவா அணை, கொனார் அணை, திலையா அணை உள்ளிட்ட அணைகள் ஜார்க்கண்டில் இருக்கின்றன. மொத்தம் 18 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 8% நிலத்துக்கு ஆறுகள் வழியாக பாசனம் கிடைக்கிறது.

கனிம வளம்

காடுகளும் மலைகளும் நிரம்பிய மாநிலம் இது என்பதால் கனிம வளத்தில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. கோபால்ட், கியானைட் ஆகிய கனிம உற்பத்தியில் நாட்டிலேயே ஜார்க்கண்ட் முதலாவது இடம் வகிக்கிறது. நிக்கல், தங்கம், நிலக்கரி, தோரியம், யுரேனியம் உற்பத்தியில் ஜார்க்கண்டுக்கு இரண்டாவது இடம்.

பொருளாதாரம்

2017-18-ல் ஜிடிபி ரூ.2.84 லட்சம் கோடி. 2014–2015 காலகட்டத்தில் இந்த மாநிலத்தில் தனிநபர் வருமானம் ரூ.62,816. விவசாயமும் அது சார்ந்தவையுமே இங்கு பிரதானத் தொழில்கள். ஜார்க்கண்ட் கனிம வளம் நிரம்பிய மாநிலம். நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல், பாக்ஸைட், தாமிரம், டோலோமைட், சீனக்களிமண், கிராஃபைட், கியானைட், குவார்ட்ஸ் பென்டோனைட், கல்நார், தோரியம், யுரேனியம் உள்ளிட்ட கனிமங்கள் இங்கு அதிக அளவில் கிடைக்கின்றன. பொதுத் துறையில் பொகாரோ உருக்காலை ஜார்க்கண்டில்தான் இருக்கிறது. தனியார் துறையைப் பொறுத்தவரை டிஸ்கோ, டெல்கோ போன்ற நிறுவனங்கள் இங்கே அமைந்திருக்கின்றன.

அரசியல் சூழல்

2000-ல் பிறந்த இந்த மாநிலம் இதுவரை நான்கு சட்டமன்றத் தேர்தல்களைக் கண்டாலும் கூட்டணித் தகராறு, பெரும்பான்மையின்மை, ஊழல் புகார்கள் போன்றவற்றால் 10 சட்டசபைகளை இதுவரை கண்டிருக்கிறது. பாஜக தலைமையிலான கூட்டணி ஐந்து முறையும் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நான்கு முறையும் ஆட்சியமைத்திருக்கிறது. 2004-ல்தான் ஜார்க்கண்ட் மாநிலம் தனது முதலாவது மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி 13 இடங்களை வென்றது. இந்தக் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆறு இடங்களை வென்றது. 2009-ல் பாஜக 8 தொகுதிகளை வென்று ஆதிக்கம் செலுத்தியது. 2014-ல் பாஜக 12 தொகுதிகளையும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 தொகுதிகளையும் வென்றது.

முக்கியப் பிரச்சினைகள்

ஜார்க்கண்ட் முழுக்க மலைகளும் வனங்களும் நிரம்பியது. பழங்குடி மக்கள் கணிசமாக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்திருக்கிறார்கள். கனிம வளம் நிரம்பிய மாநிலம் என்பதால் பழங்குடியினர் இருக்கும் இடங்களில் முறைகேடாகக் கனிமச் சுரங்கங்கள் அமைத்து மலைவளங்களையும் அங்குள்ள மக்களையும் நிறுவனங்கள் சுரண்டிக்கொண்டிருக்கின்றன. இது போன்ற பல்வேறு காரணங்கள் நக்ஸலைட்டுகளின் எழுச்சிக்குப் பின்னால் இருக்கின்றன. ஜார்க்கண்ட் நக்ஸலைட் பிராந்தியத்தின் மையம் என்று அழைக்கப்படுகிறது. அரசுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் சல்வா ஜுடும் போன்ற குழுக்களுக்கும் இடையில் சிக்கி நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆகியிருக்கிறார்கள். கட்சிகள் மக்களின் குரலைக் கேட்பதில்லை என்பதுதான் இங்கு நிலவும் பெரும் பிரச்சினை. அடுத்தபடியாக வளர்ச்சியின்மை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளில் சிக்கி ஜார்க்கண்ட் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.