இன்று தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக பல இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக கோடை மழை பெய்துவரும் நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானிலை கணிப்புகளை வெளியிடும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:

காற்றுக் குவியல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால் நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், தேனி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளுக்கு மழை வாய்ப்பில்லை.

தஞ்சாவூர், புதுகோட்டை மாவட்டங்களில் நேற்று மழை பெய்யும் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. சென்னை, நாகை, புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை முகமே இல்லாமல் இருக்கிறது.

கேரளாவில் இன்று பத்தனம்திட்டா,  புணலூர், வயநாடு, இடுக்கி  மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர் மாவட்டங்களில் அனல் காற்றுக்கு மட்டுமே வாய்ப்பு.

சென்னை, கடற்கரையை ஒட்டி இருக்கும் நகரமென்பதால் வெகு விரைவாக வெப்பமடைகிறது. அப்புறம் பகல் 12 மணியளவில் கடல்காற்று வந்து லேசாக வெப்பத்தை தணிக்கிறது. இருந்தாலும் சென்னையில், இன்றும் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

வேலூர், திருத்தணியில் 44 டிகிரிவரை வெப்பம் பதிவாக வாய்ப்பு. சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் 42 டிகிரி வரை வெயில் வதைக்கும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.