உருமாறும் உயிர்வேலிகள்!- அதிகரிக்கும் மயில்கள்; அரிதாகும் குள்ளநரிகள்…

சமீபகாலமாக குறைதீர்க்கும் கூட்டங்களில் பங்கேற்கும் விவசாயிகள், தங்களின்  விளைநிலங்களில் நுழைந்து  பயிர்களைச்  சேதப்படுத்தும் மயில்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம், தேசியப்  பறவையான மயில்களை வேட்டையாடுபவர்கள் மீதும், விஷம் வைத்துக் கொல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில்,  கிராமப் பகுதிகளில் காணப்பட்ட  உயிர்வேலியின் உள்ளே இருக்கும் உயிர்ச்சூழல் மண்டலத்தின் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்தான், இந்த பிரச்சினைக்கு மூலகாரணம் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

தேசியப் பறவையான மயில்களின்  எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளாக  அதிகரித்து வருவதும்,  அவற்றின் எதிரிகளான குள்ளநரி,  மர நாய்,  காட்டுப் பூனை ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதும்  உயிர்வேலியின் உணவுச் சங்கிலி மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

இதுகுறித்து  இயற்கை  ஆர்வலர்கள் கூறும்போது, “பல நூறு ஆண்டுகளாக வேளாண் நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகள் கள்ளிச்செடி, வேம்பு, கருவேலம் உள்ளிட்ட தாவரங்களைக் கொண்டு உயிர்வேலி அமைத்தனர். சாலை வசதிகள் பெருகாத அந்தக்  காலத்தில் காடு, கழனிகளுக்கு மனிதர்கள் செல்ல இருபுறமும் உயிர்வேலியால் உருவாக்கப்பட்ட  சிறு வழியை உருவாக்கினர் அதை தொக்கடா என்று அழைப்பர். அருகில் உள்ள கிராமங்களுக்கு மாட்டு வண்டிகளில்  செல்ல, இருபுறமும்  உயிர்வேலிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதை இரட்டை வேலியாகும்.  இந்த இரட்டைவேலி  பேச்சு வழக்கில் இட்டேரி என மருவியது. இந்த தொக்கடா மற்றும் இட்டேரியின் இருபுறங்களிலும் உருவாக்கப்பட்ட உயிர்வேலிகள் காலப்போக்கில் பல்லுயிர் மண்டலமாக மாறின.

அடர்ந்த வனத்தில் தேக்கு, சந்தனம், ஈட்டி, கருமருது மரங்கள் வளர்ந்த சூழலில், கிராமப்புற உயிர்வேலிகளில் கருவேலன்,  நுணா, புங்கன், ஆயா மரம், மஞ்ச கடம்பு, அரசு, புரசு, வேம்பு ஆகிய மரங்களுடன், வேலிகாத்தன், சப்பாத்திக்கள்ளி, காரச்செடி, காந்தள் செடி (இதற்கு குள்ளநரிப் பூ என்ற பெயரும் உண்டு) நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் செடிகளுடன், பிரண்டை, தூதுவளை, கோவை, முசுமுசுக்கை, போன்ற கொடிவகைகள்  பின்னிப்பிணைந்து  வளர்ந்தன.

தண்ணீர் வசதி இல்லாத இடத்தில், கள்ளி, பாச்சான் போன்ற செடிகளும்,  தண்ணீர் வசதியுள்ள இடங்களில் கொட்டை செடி, மூங்கில் என இடத்துக்கு இடம் உயிர்வேலிகள் மாறுபடுகின்றன.  உயர்வேலிகளில் எண்ணற்ற பூச்சியினங்கள் , கரையான் புற்றுகள் , எலி  பொந்துகள்,  வண்டுகள் , நண்டுகள், பாம்புகள்,  உடும்பு ,

ஓணான்,  காடை, கவுதாரி,  புழுதி குருவி, செம்பூத்து, கருங்குயில், பொரிக்குயில், ஆந்தை, மயில்,  பருந்து, குள்ளநரிகள், காட்டுப்பூனைகள், கீரி, மரநாய்கள்  உள்ளிட்ட ஊர்வன, நடப்பன, பறப்பன என அனைத்து ஜீவராசிகளும் வாழ்ந்து வந்தன. உயிர்வேலியின் பல்லுயிர் மண்டலம்  உணவுச்சங்கிலி, சூழல் சமன்பாட்டுடன் விவசாயப் பயிர்களுக்கு ஊறுவிளைவிக்கும் பூச்சிகளையும், சிறு உயிர்களையும் தின்று விவசாய நிலங்களையும் காத்துநின்றன. இடம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட தன்மைகளுக்கு ஏற்ப, உயிர்வேலியில் முன்னோர்கள் தாவரங்களை வளர்த்துள்ளனர். மண் மற்றும் பயிர் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பல்லுயிர்ப் பெருக்கத்தின் மூலதனமாகவும் உயிர்வேலிகள் விளங்கியுள்ளன.

கம்பி வேலி, மின் வேலி…

தற்போதைய சூழலில், கம்பி வேலி, மின்வேலி ஆகியவற்றை அமைத்து, விவசாயிகளுக்கு நன்மை அளித்து வந்த உயிரினங்களை அழித்து விட்டனர். இதனால் விவசாயப் பயிர்கள் பல நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. `வேலியே பயிரை அழித்தது’ என்ற பழமொழி,  கம்பி வேலி அமைத்த விவசாயிகளுக்கு சாலப் பொருந்தும். 

உயிர்வேலிகளையும், முட்புதர்களையும்  வாழிடங்களாகக் கொண்ட மயில்கள், தங்களின் இனப்பெருக்க காலமான வைகாசி முதல் தை மாதம்  வரையில் 5 முதல் 10 முட்டைகள் வரை இடுகின்றன. இவற்றில் சில முட்டைகள் குள்ள நரி உள்ளிட்ட விலங்குகளால் வேட்டையாடப்பட்டு விடுகின்றன. மீதியுள்ள முட்டையை மயில்கள் அடைகாத்து, குஞ்சு பொரிக்கின்றன. அவற்றில் சில மயில் குஞ்சுகள், பருந்து, ஆந்தை, குள்ளநரி, காட்டுப்பூனைகளுக்கும் இரையாகி விடுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மயில்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருந்தன.

தற்போது உயிர்வேலிகள் அழிக்கப்பட்டதால், வண்டு, நண்டு, பாம்புகள், ஓணான், பூச்சிகள், தவளைகள், பாம்புகளின் எண்ணிக்கையும்  வெகுவாகக் குறைந்துவிட்டது. உணவுச் சங்கிலி உடைப்பட்டதால், மயில்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை உணவாக்கிக் கொள்ளத் தொடங்கின. இதனால்,  விளைநிலங்களை நோக்கி மயில்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.

உயிர்வேலி உயிரூட்டமான சூழலை உருவாக்குவதுடன், விளை நிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. மேலும், குள்ளநரிகளின் வாழிடமான உயிர்வேலிகள் அழிக்கப்பட்டதால், அவைகள் விளை நிலங்களின் உள்ளே அகதிகளாக நுழைந்தன.  அவை, தோட்டங்களில் வளர்க்கப்பட்ட வேட்டை நாய்களாலும், கிராமத்தில் வேட்டைக்கு

செல்பவர்களாலும் வேட்டையாடப்பட்டு, தற்போது  குள்ளநரி இனமே அழிவின் விழிம்பில் உள்ளன” என்றனர்.

உயிர்வேலியின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுவது குறித்து விவசாயி அழகேசன் கூறும்போது, “தாத்தா காலத்தில் இருந்தே  விவசாயம் செய்து வருகிறோம். அந்தத் காலத்தில்,  பயிர்களில் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்காது. பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை, உயிர்வேலியில் வாழும்  குருவிகளும், ஓணான்களும், தவளைகளும் சாப்பிட்டன.  வயல்களில் அதிகமாக இருந்த எலி, தவளை, பாம்புகள் ஆகியவற்றை,  ஆந்தை, பருந்துகள் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை கீரியும், மயில்களும் கட்டுப்படுத்தின. காடை, கவுதாரி, முயல், மயில்களின் பெருக்கத்தை குள்ள நரிகளும், காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தி  வைத்திருந்தன. இந்த நடவடிக்கைகளால், உயிர்வேலியின் உணவுச் சங்கிலி பாதுகாக்கப்பட்டது.

மேலும், ஆடு, மாடுகள் உணவாக உட்கொள்ளும், மருத்துவக் குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களும் உயிர்வேலியில் தானாகவே வளர்ந்தன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் கருவேல மரங்கள் கருங்கல்லாகவும், செடிகளும், கொடிகளும், முள்கம்பிகளாவும் உயிர்வேலிகள் உருமாறத் தொடங்கின.

பின்னர், முள்கம்பி வேலிகள், வலை கம்பிகளாகவும், இறுதியில் சூரியசக்தி மின்கம்பி வேலிகளாகவும் மாறிவிட்டன. தார் சாலைகள் தோன்றியபோது, தொக்கடா அழிந்தன, இட்டேரிகள் மறைந்தன.  இதன் விளைவாக,  எண்ணற்ற சிற்றுயிர்கள் வாழ இடமின்றிப் போனது” என்றார்.

அதிகரித்து வரும் மயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களும், மயில்களின் பெருக்கத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதாக வேதனைப்படுபவர்களும் இணைந்து, உருக்குலைந்த உயிர்வேலியின் உணவுச் சங்கிலி அமைப்பை சீரமைத்து ,  குள்ளநரி, காட்டுப்பூனை, கீரி, மயில் உள்ளிட்ட சிற்றுயிர்களின் வாழிடங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின்கருத்து.