எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் மறைவு: கடலோடிகளின் வாழ்வியலை துல்லியமாக சித்தரித்தவர்; வைகோ இரங்கல்

மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் மறைவுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 74.

அவருடைய மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாஞ்சில் நாடு தமிழிலக்கிய உலகுக்கு தந்த கொடை தோப்பில் முஹம்மது மீரான் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 1997 இல் வெளிவந்த அவரது சாய்வு நாற்காலி புதினம் மிகவும் என்னைக் கவர்ந்தது. மிகச்சிறந்த இந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் தோப்பில் முஹம்மது மீரான்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, அஞ்சுவண்ணம் தெரு போன்ற புதினங்களும் பல சிறுகதைத் தொகுப்புகளும் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களும் முஹம்மது மீரானின் படைப்புத்திறனை பறைசாற்றியவை ஆகும்.

தென்குமரிமுனையில் தேங்காய்பட்டினத்தில் பிறந்து, தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் ஆளுமைத் திறன் உள்ளவராக விளங்கியவர்.

கடலோடிகளான மீனவ சமூக மக்களின்  வாழ்வியலை துல்லியமாக சித்தரிக்கும் அவருடைய நாவல்களில் எளிய மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை அவருக்கே உரிய தனித்துவமான நடையில் நாஞ்சில் நாட்டுக்கு உரிய மலையாளம் கலந்த தமிழில் எழுதியிருப்பது அவருடைய சிறப்பாகும்.

மதிமுக இலக்கிய அணி சார்பில் நடத்திய விழாவில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை இன்னமும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு காட்டிய அவருடைய உயரிய பண்பாடு என்றென்றும் நன்றிக்கு உரியதாகும்.

தோப்பில் முஹம்மது மீரான் மறைவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழிலக்கிய அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என வைகோ தெரிவித்துள்ளார்.