எழுவர் விடுதலை: கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல; திருநாவுக்கரசர் கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது ஏற்புடையதல்ல என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், இனியும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவன ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடும் என, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில், இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “கருணை அடிப்படையில் விடுதலை செய்வது, எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும். இதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதனால், கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு” என, திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

முன்னதாக, 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தனிச்சையாக முடிவெடுக்க வேண்டும் எனவும், அவருக்கு அழுத்தம் தரக்கூடாது எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.