கதையின் நாயகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள்.

அவர்கள் எல்லோருமே பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வசூலை அள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஃபார்முலா சினிமாக்களிலேயே கவனம் செலுத்திவருகிறார்கள். இவர்களுக்கும் அப்பால் தமிழ் சினிமாவின் கிரியா ஊக்கியாக, ஊக்க சக்தியாக யார் இருக்கிறார்கள்?

மார்க்கெட் சிறியதாக இருந்தாலும் படத்தின் வியாபாரம் பற்றி அலட்டிக்கொள்ளாமல், வணிக சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் தரமான, தகுதியான படங்களுக்காக அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சாதாரண ரசிகர் முதல் வெகுஜன ரசிகர் வரை சென்றடைந்து, வழக்கமான ஃபார்முலா சினிமாவைத் தகர்த்தெறிந்து தமக்கெனத் தனியிடம் பிடித்திருக்கிறார்கள்.

எப்போதும் வித்தியாசம்

வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று நடிக்கும் நடிகர்களின் பட்டியலில் விஜய் சேதுபதிக்கே முதலிடம். அடிக்கத் தெரியாத ரவுடி, பயந்த ரவுடி, போலி ரவுடி என்று நடித்த விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அவரின் ‘ஆரஞ்சுமிட்டாய்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் வசூல்ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.

அதற்காக விஜய் சேதுபதி தன் மாறுபட்ட முயற்சிகளை மூட்டை கட்டி வைக்கவில்லை. ‘எனக்குத் திருப்பி அடிக்கத் தெரியும்’ என்று ‘சேதுபதி’யில் திறமை காட்டினார். ‘விக்ரம் வேதா’வில் மாஸ் ரவுடியாக வலம்வந்தார்.  ‘96’ படத்தின் மூலம் பேரன்பு காட்டும் பெருங்காதலனாக வசீகரித்தார்.

25-வது படம் என்றால் காலம் தாண்டியும் பேசப்பட வேண்டும் என்பதற்காக  மாஸ் படம் கொடுக்கவே கதாநாயகர்கள் நினைப்பது வழக்கம். ஆனால், ‘சீதக்காதி’ படத்தில் சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் நாடகக் கலைஞர் கதாபாத்திரத் துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, கலைக்காக வாழும் நடிகனாகவே மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

‘சூப்பர் டீலக்’ஸில் ஷில்பா எனும் திருநங்கையாக நடிப்பைக் கடத்தினார். இதை கமர்ஷியல் சூழ் சினிமா உலகம் இன்று புரிந்துகொள்ளாவிட்டாலும் வியாபாரக் கணக்கின் வழி நின்று குறையாகச் சொன்னாலும் பின்வரும் காலங்களில்  விஜய் சேதுபதியின் பரிமாண பலம் சினிமா வரலாற்றில் பேசப்படும்.

நம்பிக்கை நாயகன்

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு களாய் சினிமாவின் தீராக் காதலனாய் இருக்கிறார் அருண் விஜய். தாமதமாக மக்கள் அங்கீகாரம் பெற்ற இவர்தான், தமிழ் சினிமாவில் முதன்முதலில் சிக்ஸ்பேக் வைத்த நாயகன். விஜய், அஜித்துக்கு அடுத்ததாகவும் சூர்யா- கார்த்திக்கு முன்பாகவும் சினிமாவுக்குள் நுழைந்த இவரைக் காலம் கண்டு கொள்ளவே இல்லை.

அதற்காக அருண் விஜய் கவலைப்பட்டாரே தவிர, தன் கடமையைச் செய்யத் தவறவில்லை. தனக்கான வெளிச்ச வாய்ப்புகள் உருவாகும்வரை காத்திருந்தார். அந்தக் காத்திருப்பு வீண் போகவில்லை. ஃபார்முலா சினிமாவுக்கு முழுக்குப் போட்டார்.

மகிழ்திருமேனியின் ‘தடையறத் தாக்க’ அருண் விஜய்யைத் திரும்பிப் பார்க்கவைத்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் நடித்த  ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்குள் இருந்த நடிகனை அடையாளம் காட்டியது.

‘குற்றம் 23’, ‘செக்கச்சிவந்த வானம்’ படங்களின் மூலம் மெருகேறியவர், ‘தடம்’ படத்தின் மூலம் ஓர் உருக்கொண்ட இரட்டையர் கதாபாத்திரங்களில் நடித்து திருப்புமுனையின் உச்சத்தில் உள்ளார். அருண் விஜய் படம் என்றால் மறுக்காமல் பார்க்கலாம் என்ற அளவுக்கு இன்று வளர்ந்து நிற்பதே அவருக்கான இடமும் தடமும்.

திரில்லர் குதிரை

அருள்நிதி தனக்கு என்ன வரும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார். ‘மௌனகுரு’ மூலம் கிடைத்த பெயரை அப்படியே தக்கவைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தி வருவது ஆரோக்கியமான அம்சம். தன்னை நம்பி வரும் ரசிகர் திருப்தியடையும் வகையில் படம் கொடுக்க வேண்டும் என்று கணிசமான அளவில் வரவேற்புக்குரிய படங்களைக் கொடுக்கிறார்.

‘டிமான்ட்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மூலம் கான்செப்ட் சினிமாவுக்குக் கை குலுக்கும் அருள்நிதி ‘k-13’ படத்தின் மூலம் என் வழி இதுதான் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதே பாதையில் அவர் தொடர்ந்து பயணித் தால் சின்ன பட்ஜெட் படங்களின் சிறந்த நாயகனாகவும், கதைத் தன்மையுள்ள படங்களின் ஆதர்சக் கலைஞனாகவும் வலம் வருவார்.

சினிமா ராட்சசன்

அறிமுகப் படமான ‘வெண்ணிலா கபடிக் குழு’வில் இருந்தே அபாரமான படங்களைத் தேர்வு செய்து வருகிறார் விஷ்ணு விஷால்.  இவர் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பார் என்று ஊகிக்க முடியாத அளவுக்குக் கதைத் தேர்வில் அசத்துவது விஷ்ணுவின் ஸ்பெஷல். ‘குள்ளநரிக்கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘ஜீவா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’, ‘மாவீரன் கிட்டு’, ‘ராட்சசன்’ என்று விஷ்ணு விஷாலின் கிராஃப் பல்வேறு ஜானர்களிலும் எகிறிக் கிடக்கிறது.

இடையில் ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்று ஃபார்முலா படங்கள் மட்டும் திருஷ்டிப் பொட்டு.  இனியாவது அதுபோன்ற படங்களில் சிக்காமல் அர்த்தமுள்ள படங்களில் கவனம் செலுத்தினால் வேற லெவல் வெரைட்டி படங்களில் விஷ்ணு விஷால் மின்னுவார்.

‘மதயானைக்கூட்டம்’ மூலம் அறிமுகமான நடிகர் கதிர், தமிழ் சினிமாவில் நல்வரவு. படங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் பேசினால் ‘கிருமி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘சிகை’ படங்களின் மூலம் கதிர் ஏற்படுத்திய அதிர்வலைகள் பெரிது என்றுதான் சொல்ல வேண்டும்.

எது நடந்தாலும் எனர்ஜி பிளஸ் என எடுத்துக்கொள்ளும் அதர்வா, பாலாவின் ‘பரதேசி’ மூலம் கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார். ‘ஈட்டி’யில் விளையாட்டு வீரனுக்கான கச்சிதத்தைக் கண் முன் நிறுத்தினார். 

‘கணிதன்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘பூமராங்’ மூலம் அந்த நம்பிக்கையைப் பலப்படுத்தினார். ‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷின் ‘குருதி ஆட்டம்’ அதர்வாவின் ஓட்டத்தை நிலைநிறுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆரம்பத்தில் நல்ல கதைகளாகத் தேர்வுசெய்து, பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் ஜீவா, விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு. மிஷ்கின், கௌதம் மேனன் படங்களில் நடித்தும் ஜீவா காணமல் போனது துயரம்தான்.

‘நான்’, ‘சலீம், ‘பிச்சைக்காரன்’ படங்களின் மூலம் மேஜிக் நிகழ்த்திய விஜய் ஆண்டனி  ‘சைத்தான்’ படத்துக்குப் பிறகு உளவியல்ரீதியான படங்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்ல விஷயம்தான். ஆனால், தொடர்ந்து அதே மாதிரி படங்களைத் தவிர்த்து கதைக்குத் தேவையான அளவில் தன்னைப் பொருத்திக் கொண்டால் அவரை ரசிக்கலாம்.

‘கும்கி’, ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ என்று ஆரம்ப காலத்தில் விக்ரம் பிரபு கதைத் தேர்வில் தீவிர கவனம் செலுத்தினார். கதைதான் பிஸ்தா என்று விக்ரம் பிரபு விவரமானவராகிவிட்டால் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.