கோவா செலவில் தாய்லாந்து!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் தொடர் ‘யாரடி நீ மோகினி’.  இதில் முத்தரசன் – வெண்ணிலா திருமணம் நடந்தே ஆகவேண்டும் என, ஆசையோடு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர் நீலாம்பரியின் 2-வது மகன் கார்த்திக். இந்த கதாபாத்திரத்தில் நடித்துவரும்  பவித்ரன், தற்போது சீரியல் நடிப்புக்கு இடையே, ‘எக்ஸ்ப்ளோர் வித் பவின்’ என்ற பெயரில் சுற்றுலா தொடர்பான யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி கலக்கி வருகிறார்.

‘‘வெளிநாட்டு பயணம்னா ஏதோ தாறுமாறா செலவாகும்னு சிலர் நினைக்கிறாங்க. முன்பின் தெரியாத ஏஜென்ட் கையில் சிக்கும்போதுதான் அதுபோன்ற நிலை வரும். மூணு பேர் கொண்ட குடும்பம் கோவா போய்ட்டு வந்தாலே ரூ.50 ஆயிரம் கண்டிப்பா செலவாகும். இதே தொகையில் தாய்லாந்தே போய்ட்டுவரலாம்.  அதற்கு சரியான திட்டமிடல் முக்கியம். இதுபோல, பயணங்கள் பற்றிய விஷயங்கள்தான் என் யூ-டியூப் சேனலில் பிரதானமாக இருக்கும்.

ஒரு யூ-டியூப் சேனல் தொடங்கலாம் என்றால், காமெடி, சினிமா விமர்சனம், சமையல் ஆகியவற்றில்தான் பலரும் ஆர்வம் செலுத்தறாங்க. ‘மாத்தி யோசி’ன்னு நான் பயணம் தொடர்பான விஷயத்தில் இறங்கிட்டேன்’’ என்கிறார் பவித்ரன்.

‘‘சரி, ‘யாரடி நீ மோகினி’ தொடரில் முத்தரசன் யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறார்?’’ என்று கேட்டதற்கு, ‘‘யார் மணமகள்.. வெண்ணிலாவா, ஸ்வேதாவா? என்ற டென்ஷன், பதற்றம் எனக்கும் இருக்கு. கூடிய சீக்கிரமே முத்தரசனுக்கு திருமணம் நடக்கப்போகுது. அதுக்கு இடையே வில்லி ஸ்வேதாவால் சின்னச் சின்ன திருப்பங்களும் இருக்கு. அந்த ட்விஸ்ட் கட்டங்களுக்காக நாங்க விறுவிறுப்பா உழைச்சிட்டிருக்கோம்!’’ என்றார்.