சின்ன குஷ்பு.. குஷியில் ஏக‘வில்லி’

சன் தொலைக்காட்சியில் கிளைமாக்ஸை எட்டியுள்ளது ‘பிரியமானவள்’ தொடர். இதில் ‘செவ்வந்தி’ என்ற வில்லியாக நடித்துவந்த ஏகவல்லி, தனது கதாபாத்திரம் சிறப்பாக நிறைவு பெற்றதை தோழிகளுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.

‘‘பல அத்தியாயங்கள் அசத்திய சீரியல் இது. இப்போது நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் பக்கா வில்லியாக, அந்த சீரியலில் சமீபத்தில்தான் உள்ளே வந்தேன். ஆனாலும் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருப்பது மகிழ்ச்சி.

அதேபோல,  கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிவகாமி’ தொடரில் பத்மாவதி என்ற 45-50 வயதுடைய மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ‘நாட்டாமை’ படத்தில் சின்ன வயதிலேயே வயதான கெட்டப்பில் நடித்த குஷ்பு மாதிரியே இருக்கேன் என்று பலரும் பாராட்டுறாங்க. ராதிகா, அம்பிகா போன்ற நடிகைகள் சின்ன வயதிலேயே வயதான கெட்டப்பில் நடிச்சு பாராட்டை அள்ளினாங்க. எனக்கும் அதுபோன்ற கேரக்டர் அமைஞ்சிருக்கு. அதுவும் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்குது. வயசான பிறகுகூட இதுபோன்ற கதாபாத்திரம் கிடைக்குமான்னு தெரியல. அதனால, வாய்ப்பு அமையும்போதே அசத்திடணும்னு ஓடிட்டிருக்கேன்.

அடுத்தடுத்து 2 புதிய சீரியல்களுக்கான பேச்சுவார்த்தை முடியும் சூழலில் இருக்கு. ‘உன் கண்கள், வில்லி கதாபாத்திரத்துக்கு அச்சு அசலாக பொருந்துவதால், தொடர்ந்து அப்படியே நடி’ என்று எல்லோரும் சொல்றாங்க. நானும் அந்த பாதையை நோக்கியே அதிகம் பயணிக்கிறேன்’’ என்கிறார் ஏக‘வில்லி’.