டிஜிட்டல் மேடை 26: பூமி தப்பிப் பிழைக்கட்டும்!

கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சேர்ந்து பயனுள்ளதாக நேரத்தைக் கழிக்க விரும்புவோர் ‘நெட்ஃபிளிக்’ஸில் கடந்த மாதம் வெளியான ‘அவர் பிளானட்’ (Our Planet) ஆவணப் படத்தொடரைக் கண்டு ரசிக்கலாம்.

காட்சி ஆவணம்

60 நாடுகளில் 4 ஆண்டு மெனக்கெடல், கடல் பரப்பில் மட்டும் 911 தினங்கள், கடலுக்குள் 2,000 மணி நேரக் காத்திருப்பு, 600 பேர் அடங்கிய படக் குழுவினரின் 200-க்கும் மேற்பட்ட பயணங்கள் என அசகாய உழைப்பைக் கொட்டி ‘4K’ தரத்திலான காட்சி ஆவணங்களுடன் வந்திருக்கிறது ‘அவர் பிளானட்’.

பிபிசி தயாரிப்புகளான ‘பிளானட் எர்த்’, ‘புளூ பிளானட்’ ஆவணப் பட வரிசையில், உலக இயற்கை நிதியத்தின் உதவியுடன் ‘நெட்ஃபிளிக்ஸு’க்கான பிரத்யேகத் தயாரிப்பாக ‘அவர் பிளானட்’ உருவாகி இருக்கிறது.

முந்தைய ஆவணப் பதிவுகளில் பார்வையாளரை மென்மையாகக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற டேவிட் அட்டன்பரோவின் வாஞ்சையான குரல் இதிலும் தொடர்கிறது.

டேவிட் அட்டன்பரோ உட்பட ‘அவர் பிளானட்’ படக்குழுவின் பெரும்பாலானோர் முந்தைய இரு ஆவணப் படங்களின் வழியாக அனுபவம் பெற்றவர்கள்.

இந்தப் பூமியின் சுற்றுச்சூழல் அதன் அழிவின் விளிம்பிலிருப்பதற்குச் சாட்சியாகும் கடைசித் தலைமுறை நாம். அழிவை நடத்திக்கொண்டிருக்கும் மனிதர்களை இந்தச் சூழலும் அதில் வாழும் சக உயிரினங்களும் சதா இறைஞ்சிக்கொண்டும் எச்சரித்துக்கொண்டும் இருக்கின்றன. நம்மில் பெரும்பாலானோருக்கு எட்டாத அந்தக் குரல்களைக் காட்சிப் பதிவுடன் மொழிபெயர்த்து தர முயல்கிறது ‘அவர் பிளானட்’.

சூழலியல் பிரச்சினைகள்

ஆர்க்டிக்கின் உறைபனி பரப்பு முதல் தென் அமெரிக்காவின் அடர் காடுகள்வரை அழகுடன், வசீகரமும் மர்மமும் கலந்த இயற்கையை நெருக்கமாக ரசிக்கலாம்.

சூழலியலின் அழகை வர்ணித்துக்கொண்டே வரும்வழியில் சட்டென்று மனித இனத்தால் சூழலியல் சுரண்டப்படுவதையும் அதனால் சக உயிர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் உள்வாங்கச் செய்கிறார்கள்.

ஒரு காட்சியில் ‘அடுத்துவரும் 20 ஆண்டுகளில் மனிதனின் செயல்பாடுகளைப் பொறுத்தே இந்தப் பூமியும் அதில் வாழும் சக உயிர்களின் எதிர்காலமும் இருக்கிறது’ என்பார் அட்டன்பரோ. சிறார் பார்வையாளரை இலக்காகக்கொண்டே பெரும்பான்மையான காட்சிகள் அமைந்திருப்பது அந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் உதவும்.

பல்லுயிரின் அங்கமான பூஞ்சைகள், எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கு வலைவிரித்து உண்பது சிலிர்க்க வைக்கும். இணையைக் கவர்வதற்காக மேடை தயார் செய்து சேட்டைகள் செய்யும் பறவை ஆச்சரியமூட்டும்.

இவற்றுடன் நீலக் கடற்பரப்பில் அலைகளுடன் போட்டியிட்டுத் துள்ளி நடனமாடும் ஓங்கில்கள், காங்கோ மலைக்காடுகளின் அலையும் கொரில்லாக்கள், ஆகாயத்தில் பறந்தபடி சண்டையிடும் இருவாச்சி பறவைகள், கலிஃபோர்னியா வளைகுடாவில் குட்டியைப் பழக்கும் நீலத் திமிங்கலம், சைபீரியக் காடுகளில் மிச்சமிருக்கும் பெரும் புலிகள் என ரசித்துக்கொண்டே வரும்போது அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் குறுக்கிடுகின்றன.

ஆவணப் பதிவு

புவி வெப்பமயமாகும் சூழலியல் கேடால் பனிப்பாறை உறைவிடத்தைத் தேடியலையும் வால்ரஸ்கள், மலைச்சரிவில் சறுக்கிக் கொத்துக்கொத்தாய்ச் செத்து விழுவது நம்மைக் குற்ற உணர்வில் ஆழ்த்தும். பூமியின் இயற்கை வளங்கள் தொடர்ந்து அழிவைச் சந்திப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பதை இந்த ஆவணப் பதிவு உணர்த்துகிறது.

 வெறுமனே சக உயிரினங்களை அறிவது, ஆராய்வது, இயற்கை அழகை ரசிப்பதற்கு அப்பால் அவற்றை நேசிக்கவும், சூழலியல் அழிவால் தவிக்கும் உயிர்களின் போராட்டத்தைப் புரிந்துகொள்ளவும் ‘அவர் பிளானட்’ உதவும்.

இதைப் பார்க்கும் குழந்தைகளிடம் தண்ணீரை வீணாக்காதே, பிளாஸ்டிக் பயன்படுத்தாதே, சக உயிருக்குக் கேடு செய்யாதே என்று தனியாகப் பாடம் புகட்ட அவசியமிருக்காது. பின்னணி இசைக்கோப்பு ஹாலிவுட் படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது.

தொடரில் இடம்பெறும் ‘இன் திஸ் டுகெதர்’ பாட்டும் இசையும் உருக வைக்கிறது. சராசரியாகத் தலா 50 நிமிடங்கள் கொண்ட 8 எபிசோடுகளையும் அலஸ்டர் ஃபதர்கில் இயக்கி உள்ளார்.

இவற்றுடன் ‘பிகைன்ட் தி சீன்ஸ்’ என்ற தலைப்பிலான ஒரு மணி நேரம் கொண்ட, படப்பிடிப்பின் தடுமாற்றங்களும் சவால்களும் அடங்கிய தொகுப்பும் பார்க்கத் தகுந்தது.

https://bit.ly/2PPQ5wx