தஞ்சை மாவட்டத்தில் 2 சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளின் பெயரில் ரூ.360 கோடி கடன் பெற்று மோசடி: ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் 2 தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளின் பெயரில் ரூ.360கோடி வங்கிக் கடன் பெற்று மோசடிசெய்த ஆலை உரிமையாளர் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், திருஆரூரான் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தம்புசாமி, செயலாளர் பி.எம்.காதர்உசேன், கரும்பு விவசாயி கபிஸ்தலம் ராமகிருஷ்ணன்ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் டி.ரவீந்திரன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையும், திருவிடைமருதூர் தாலுகாவில் கோட்டூரில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த 2 ஆலையிலும் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கான அரவை பாக்கி ரூ.82 கோடியை இதுவரை வழங்கவில்லை.

இவ்விரு ஆலை நிர்வாகமும், விவசாயிகள் கரும்பை பதிவு செய்யும்போது அவர்களிடம் பல்வேறு படிவங்களில் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு, அதைக் கொண்டு கும்பகோணத்தில் உள்ள பல வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் ரூ.360 கோடி வரை கடன் பெற்றுள்ளன. இந்தத் தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்துமாறு கரும்பு விவசாயிகளுக்கு வழக்கறிஞர் மூலம் வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றன. இதுதொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல, கடலூர் மாவட்டம் சித்தூரில் இதே நிர்வாகத்துக்குச் சொந்தமான சர்க்கரை ஆலையில் விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.80 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஆலை உரிமையாளர் ராம.தியாகராஜனை கைது செய்துள்ளனர்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.360 கோடியை வங்கியில் கடனாகப் பெற்று கரும்பு விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்துள்ள ஆலை உரிமையாளரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்தி, வங்கியில் பெற்ற தொகையை ஆலை நிர்வாகமே செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கபிஸ்தலம் கரும்பு விவசாயி க.ராமகிருஷ்ணன் கூறியபோது, “நான் ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடிசெய்து வருகிறேன். நான் ரூ.23 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ.28 லட்சத்தை செலுத்துமாறும் கார்ப்பரேஷன் வங்கியின் கும்பகோணம் கிளை வழக்கறிஞர் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், இவ்வங்கியிலில் எந்த ஒரு கடனும் பெறவில்லை. ஆலையில் கரும்பை பதிவு செய்தபோது, பல்வேறு படிவங்களில் வாங்கிய கையெழுத்தை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற்றிருப்பது தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். என்னைப்போல பல விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.