தனிமைப் படுத்தப்பட்ட பூலோக சொர்க்கம்!

மக்களை மகிழ்விக்கும், பொழுதுபோக்கச் செய்யும் சில இடங்கள் உலக அளவில் பிரசித்தி பெறும். சில இடங்களை உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்திருப்பார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. அதேசமயம், பூலோக சொர்க்கமாய் கருதப்படும் மேல் பவானி (அப்பர் பவானி) தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பார்வையில் படாமல் உள்ளது. இப்பகுதியை சிறந்த சுற்றுலாத் தலமாக்கினால், சுற்றுவட்டாரப் பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும், மக்களுக்கும் ஒரு புதிய பொழுதுபோக்கு அம்சம் கிடைக்கும் என்கின்றனர் நீலகிரி மாவட்ட மக்கள்.

அப்பர் பவானி என்பது, நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் அருகே அமைந்துள்ள ஏரியாகும். இதே பேரில் அங்கு ஓர் அணையும் உண்டு. இது, நீலகிரி-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, அப்பர் பவானி அணை,  குந்தா நீர் மின்  திட்டத்தின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. உதகையில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அப்பர் பவானி அணையின் மொத்த கொள்ளளவு 210 அடி. நீலகிரி மாவட்டத்தில் குந்தா-பைக்காரா புனல் நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.77 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் முக்கியப் பங்காற்றுவது அப்பர் பவானி அணை. பூலோகத்தில் உள்ள சொர்க்கம்போல காட்சியளிக்கும் அப்பர் பவானியைக் காண்பது, வாழ்நாளில் கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரி எப்படி இருந்தது என்பதை இன்றும் பறைசாற்றுவதுபோல உள்ளது அப்பர் பவானி வனப் பகுதி. அப்பர் பவானியை ஒட்டியே அமைதிப் பள்ளத்தாக்கும் அமைந்துள்ளது. பங்கிதாபால், போஸ்பாராவை கடந்து அமைதிப்  பள்ளத்தாக்கைச் சென்றடையலாம். அடர்ந்த வனப் பகுதியான அப்பர் பவானி காடுகளில், புலிகள், ஓநாய்கள், காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், சாம்பல் ராட்சத அணில்கள், நீலகிரி குரங்குகள், சிறுத்தைகள் வசிக்கின்றன.

நீலகிரி வரையாடு!

முக்கியமாக, நமது மாநிலத்தின் விலங்கான நீலகிரி வரையாட்டின் வசிப்பிடம் இப்பகுதி. இதற்காக இப்பகுதிகள் முக்கூர்த்தி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இயற்கை அழகைக் காணும் மக்கள், மிகுந்த பரவசமடைவார்கள். வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதிக்குச் செல்ல,  வனத் துறையினரின்  அனுமதியைப் பெறவேண்டும்.  ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.அப்பர் பவானி பகுதியில் அணை கட்டும்போது,  பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டன. அணை கட்டும் பணிகள் முடிந்ததும், படிப்படியாக பணியாளர்கள் வெளியேறி,  கடந்த மக்களவைத் தேர்தலில் அப்பர் பவானி வாக்குச்சாவடியில் 20 வாக்காளர்கள் மட்டுமே இருக்கும் நிலை உருவானது. அண்மையில் முடிந்த  மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் யாரும் இல்லாததால், இந்த வாக்குச்சாவடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது மாவோயிஸ்ட் நடமாட்டம் தொடர்பான கண்காணிப்புப்  பணிகளால்,  கெடுபிடிகள் அதிகரித்துவிட்டன. மாவோயிஸ்ட் நடமாட்டத்தைகண்காணிக்க இப்பகுதியில் அதிரடிப்படையினரின் முகாம் அமைக்கப் பட்டுள்ளது. அதிரடிப்படையினரின் தொடர் கெடுபிடிகளால்,  தற்போது அப்பர் பவானி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், அப்பர் பவானி பகுதியே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறி விட்டது.

சுற்றுலா தலமாக மாறுமா?

நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக அறியப்பட்டாலும், உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலேயே அதிக அளவு சுற்றுலாத்  தலங்கள் உள்ளன. கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா வட்டங்களில்  சுற்றுலா மையங்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன.  இந்தப் பகுதிகளை சுற்றுலாத் துறையும் கண்டுக்கொள்வதில்லை என்கின்றனர் இப்பகுதியினர்.

குந்தா வட்டத்தில் மஞ்சூர், கெத்தை, கோரகுந்தா, அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் சுற்றுலா வாய்ப்புகள் உள்ள போதும், அவற்றை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த முறை உதகை எம்.எல்.ஏ.வாக இருந்த புத்திசந்திரன்  குந்தா வட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், குந்தா பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் இப்பகுதியினர். சுற்றுலா மேம்பட்டிருந்தால், குந்தா பகுதியின் பொருளாதார நிலையும் மேம்பட்டிருக்கும் என்பதே அவர்களது கருத்து.

இந்நிலையில், அப்பர் பவானி பகுதி சீல் வைக்கப்பட்டதால், சுற்றுலா வாய்ப்பு முற்றிலுமாக பறிபோய் விட்டதாக குந்தா வட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் கூட்டமைப்புத் தலைவர் டி.நாகராஜ் கவலை தெரிவிக்கிறார்.

அவர் கூறும்போது,  “நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும்  ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலை மாவட்டத்துக்கு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மஞ்சூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்பர் பவானி சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக தடைவிதித்துள்ளனர்.

இதற்காக, அப்பர் பவானி செல்லும் சாலையில்,  10 கிலோமீட்டர் முன்பாக, கோரகுந்தா என்ற இடத்தில் வனத் துறை சோதனைச்சாவடி அமைத்துள்ளது. இதையறியாமல் அப்பர் பவானிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால்,  கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்,  அப்பர் பவானியை பார்வையிட முடியாமல்  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, அப்பர் பவானி செல்ல வனத் துறையினர் விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை இங்கு அனுமதிப்பதுடன்,  வனத் துறை சார்பில் சூழல் சுற்றுலா ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.