தனியார் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள் நடைமுறைக்கு வருவது எப்போது?

தனியார் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள், நடைமுறைக்கு வருவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தொடங்குதல், அவற்றில் புதிய பாடப்பிரிவுகள், புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வருதல், தகுதியுடைய ஆசிரியர்களை நியமனம் செய்தல், ஆகியவற்றில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம். இந்நிலையில் ஆசிரியர் நியமனம் செய்தல், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் தனியார் கல்லூரிகள் சிலவற்றில் இந்நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்ற புகார் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

அதாவது மாநில அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள், முதுநிலை பட்டமேற்படிப்புடன் ‘செட்’ எனப்படும் மாநில தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் முதுநிலை பட்டமேற்படிப்புடன் ‘நெட்’ எனப்படும் தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஹெச்.டி. எனப்படும் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு, தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயமில்லை. பிஹெச்.டி. பட்டம் பெற்றிருந்தாலே போதும்.

இருந்தபோதிலும் பிஹெச்.டி. படிப்புடன் தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பது சிறப்பு தகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் தனியார் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்புடன் எம்.ஃபில். முடித்தவர்களை குறைந்த ஊதியத்துக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்து வருகின்றனர்.

தற்போது எம்.ஃபில். கல்வித்தகுதி ஆராய்ச்சிக்கான அனுபவமாக மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, வேலைவாய்ப்புக்கு கல்வித்தகுதியாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே செட், நெட், பிஹெச்.டி. தகுதிகள் கல்லூரி ஆசிரியர் பணிக்கு அவசியமாகிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி கழக கோவை மண்டல செயலர் ப.ரமேஷ் கூறியதாவது:தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களில் பணியாற்றுபவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர், உரிய கல்வித்தகுதியின்றி குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகிறது.

இதேபோல் கல்விக் கட்டணம் வசூலிப்பதிலும், கல்லூரிக்கு கல்லூரி வேறுபாடு உள்ளது. தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கின்றனர். இதை பாரதியார் பல்கலைக்கழகமும், உயர்கல்வித்துறையும் வரைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்துக்கு ஏற்ப, தகுதியுள்ள ஆசிரியர்களையும் நியமிப்பது கல்வி நிறுவனங்களின கடமை. இதை தனியாக குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

இதேபோல் பல்கலைக்கழக செனட், சிண்டிகேட் குழுக்களில் தகுதியுடைய நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். தங்களுக்கு தேவைப்பட்டவர்களையெல்லாம் நியமிக்கும் போக்கை கைவிட வேண்டும். செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் தகுதியுடைய ஆசிரியர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகளின் படி தகுதி பெற்ற பலர், இன்று வேலைவாய்ப்பின்றி சிரமப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் உரிய கல்வித்தகுதி இல்லாத பலர், கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இதனால் தகுதியுடையவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோகிறது. இந்த விதிமுறைகளை செயல்படுத்தினால், படித்த தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யுஜிசி நெறிமுறைகளின் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு இது குறித்து அவசர கடிதத்தை அனுப்பி வருகின்றன.

இதன்படி பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 90 தனியார் கல்லூரிகளுக்கு பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கே.முருகன், அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் பி.திருநாவுக்கரசு கூறியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், ஆசிரியர் கழகங்களின் கோரிக்கை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளின்படி, தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் தகுதிகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கேற்ற ஊதியமும் வழங்க வேண்டும் என்று, இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிகளுக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் சிண்டிகேட் கூட்டம் கூட்டி இதற்கு உரிய தீர்வு எட்டப்படும். தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 3 ஆண்டுகளுக்குள் உரிய கல்வித்தகுதியைப் பெற, 6 மாதங்களுக்கு முன் அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை தனியார் கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.