திரைவிழா முத்துக்கள்: அவள் ஒரு புதிர்!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவுகொள்வது தண்டனைக்குரிய குற்றம். அப்படியொரு தேசத்தில் 20 வயது இளம் பெண்ணான சோஃபியா திருமணமாகாமல் கர்ப்பமடைகிறாள். அதனால் அவளும் அவளுடைய குடும்பத்தாரும் படும்பாட்டை வெளிப்படுத்துகிறது ‘சோஃபியா’ என்ற படம்.

பிரான்சின் ஆளுகைக்குக் கீழ் 44 ஆண்டுகளாக மொராக்கோ இருந்ததால் படத்தின் கதைக்களம் வட ஆப்பிரிக்காவாக இருந்தாலும் பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா உள்படப் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.

பெற்றோரோடு வீட்டில் மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் சோஃபியா. திடீரென்று வயிற்று வலியில் துடிக்கிறாள். அவளை வீட்டின் சமையலறைக்கு அழைத்துச் செல்கிறாள் மருத்துவ மாணவியான சோஃபியாவின் அத்தை மகள் லீனா.

நிற்க முடியாமல் தடுமாறும் சோஃபியாவின் ஜீன்ஸ் பேண்ட்டில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்துத் திடுக்கிட்டு, ‘நீ கர்ப்பமாக இருக்கிறாயா?’ என்று கேட்கிறாள். சூழலைச் சமாளிக்க சோஃபியாவின் பெற்றோரிடம், “பெண்களுக்கே உரித்தான அசவுகரியம்” என்று சொல்லிவிட்டு சோஃபியாவை மருத்துவமனைக்குத் தன்னுடைய காரில் அழைத்துச் செல்கிறாள்.

ஆதாரங்கள் எங்கே?

நிறை மாதக் கர்ப்பிணிக்குரிய எத்தகைய அறிகுறியும் இன்றி ஒட்டிப்போன வயிற்றுடன் காணப்படுகிறாள் சோஃபியா. கர்ப்பத்தை உளவியல்ரீதியாக ஏற்க மறுக்கும் ‘பிரெக்னென்சி டினையல்’ (Pregnancy denial) என்கிற நோய்க்குறி அவளுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 சோஃபியா வுக்குப் பிரசவ வலி வந்துவிடுகிறது. மருத்துவமனைக்குள் நுழைந்ததும் “உங்களுடைய மற்றும் உங்கள் கணவரின் அடையாள அட்டை இன்னபிற தகவல்கள் அதற்குரிய ஆதாரங்கள் எங்கே?” என்று சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

சட்டப்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், ஏற்கெனவே பனிக்குடம் உடைந்து குழந்தைப்பேறின் உச்சக்கட்டத்தில் துடித்துக்கொண்டிருக்கிறாள் சோஃபியா. வேறு வழியில்லாமல் போக அவசரமாகப் பிரசவம் பார்க்கப்பட்டுப் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் சோஃபியா. எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க சோஃபியாவும் லீனாவும் சிசுவைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்கிறார்கள்.

சட்டமும் சமூகமும்

பாரம்பரியமான இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவள் சோஃபியா. மாதச் சம்பளத்தை நம்பி வாழும் மத்தியத் தர குடும்பம். அவளுடைய அத்தை மகள் லீனாவோ மேட்டுக்குடியைச் சேர்ந்தவள். ஆனால், படாடோபம் காட்டாமல் இயல்பாகப் பழகுபவள்.

இந்நிலையில், ஒருபுறம் தன்னுடைய குழந்தையின் தகப்பனைச் சட்டத்துக்கு முன்பாக நிறுத்த தவறினால் சிறைத் தண்டனை. அதேவேளையில் அவன் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

 

மறுபுறம் தங்களுடைய உற்றார் உறவினருக்குத் தெரியாமல் இந்த அசம்பாவிதத்தை மூடி மறைக்க வேண்டும் போன்ற பல நிர்ப்பந்தங்களால் சோஃபியாவும் அவளுடைய குடும்பத்தினரும் எப்படியெல்லாம் அலைக் கழிக்கப்படுகிறார்கள் என்பதே படம்.

மிகத் தீவிரமான சிக்கலைப் புனைந்திருக்கும் படம் என்றாலும் ஆரம்பக் காட்சிகளைத் தவிர பெரும்பாலான காட்சிகளில் நகைச்சுவை இழையோடவே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஓர் இளம் பெண் படும்பாட்டை ஒரு கோணத்தில் சித்தரிக்கும்போது வேறொரு புதிய கோணத்தையும் படம் இணையாகச் சொல்லிக் கொண்டே போகிறது.

புதிய பார்வை

அது என்னவென்றால், வறுமையான பின்புலத்தைச் சேர்ந்த ஓமர்தான் தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் என்று கைகாட்டுகிறாள் சோஃபியா. முதலில் தன்னுடைய மகனுக்காக வாதாடும் ஓமரின் தாயும் சகோதரியும் தங்களைவிட சோஃபியாவின் குடும்பத்தினர் கூடுதலாக வசதிபடைத்தவர்கள் என்று தெரிந்ததும் சமாதானத்துக்கு வருகிறார்கள். முதலில் முரண்டுபிடிக்கும் ஓமரும் போலீஸ் விசாரணையின்போது குழந்தைக்கு தான்தான் தந்தை என்பதை ஒப்புக்கொள்கிறான்.

ஆனால், படத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியூட்டும் திருப்பத்தை வைத்திருக்கிறார்கள். ஓமருக்கும் சோஃபியாவுக்கும் திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்துகொண்டிருக்கும்போது, “ஓமர் அப்பாவி” என்கிறாள் சோஃபியா.

ஏன் அவன் மீது பழி சுமத்தினாள் சோஃபியா, எதனால் பழியைத் தானே ஓமர் ஏற்றுக்கொண்டான் போன்ற பல கேள்விகளுக்கு ‘பணம் பத்தும் செய்யும்’ என்கிற வேறொரு பார்வையையும் படம் பதிவு செய்திருக்கிறது.

ஒரு பிரச்சினை, அதற்கான தீர்வை நோக்கிய நகர்வு என்பதே பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் ஃபார்முலா. ஆனால், சோஃபியா படம் முற்றிலும் வேறு விதமான அனுபவத்தைப் பார்வையாளருக்கு ஊட்டுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதி கேட்கும் கதை என்பதில் தொடங்கி ஊகிக்க முடியாத தளத்துக்குப் படம் நகர்கிறது. ஆணா திக்கப் பண்பாட்டுச் சூழலும் வர்க்க ஏற்றத்தாழ்வும் நிறைந்த சமூகத்தின் பலியாடுகள் பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும்தான் என்ற உண்மையைச் சூசகமாக சோஃபியாவின் வழியாகப் பேசுகிறது இப்படம்.

கட்டுரையாளர்

தொடர்புக்கு:

susithra.m@thehindutamil.co.in