நடுவிரலில் மை வைக்கப்படும்; மறு வாக்குப்பதிவுக்கான வாக்குச்சாவடிகள் அறிவிப்பு: 11 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்

மறு வாக்குப்பதிவு நடக்கவுள்ள 13 வாக்குச்சாவடிகளின் விவரங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரி, திருவள்ளூர், தேனியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் வாக்கா ளர்கள் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் என 2 வாக்குகள் பதிய வேண்டும்.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு நாளன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் பிரச்சினை ஏற்பட்டது. அதேபோல திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, கடலூர்மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திர கோளாறு, மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டது.

இதையடுத்து இந்த 10 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரைத்தார். மேலும், 46 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகவும் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதனால், மொத்தம் 56 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தருமபுரி, திருவள்ளூர், கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடிகளுடன் தேனியில் 2, ஈரோட்டில் 1 என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இந்த 13 வாக்குச்சாவடிகளில் தருமபுரி, தேனி, திருவள்ளூரில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுநடக்கும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

வாக்குச்சாவடிகள் விவரம்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பூந்தமல்லி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி (195), தேனியில் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மாவர் சரஸ் வதி நடுநிலைப் பள்ளி (67), பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளி (197), தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி (181,182), நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளி (192,193,194,195), ஜல்லிபுதூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி (196,197), கடலூரில் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருவதிகை நகராட்சிஉயர்நிலைப் பள்ளி (210), ஈரோட்டில் காங்கேயம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி (248) ஆகிய 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் திருவள் ளூர், தருமபுரி, தேனியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் என 2 வாக்குகளைவாக்காளர்கள் பதிவு செய்ய வேண்டும். கடலூர், ஈரோட்டில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களித்தால் போதுமானதாகும்.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறும்போது, ‘‘மறு வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும். திருவள்ளூரில் ஆயிரத்து 49, தருமபுரியில் 6 ஆயிரத்து 59, கடலூரில் 657, ஈரோட்டில் 920, தேனியில் 2 ஆயிரத்து 660 என மொத்தம் 11 ஆயிரத்து 345 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மறு வாக்குப்பதிவு குறித்துவாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது’’ என்றார்.