நவீன அரிசி ஆலைகளில் இருந்து காற்றில் பறக்கும் கரித்துகள்கள்: காஞ்சிபுரம் பகுதி பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளில் புகைப்போக்கியில் சல்லடைகள் பொருத்தப்படாததால் கரித்துகள்கள் காற்றில் பறந்து மக்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த விஷயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேகமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக நெல் விவசாயம் நடைபெறுகிறது. நெல் விவசாயத்துக்குத் தகுந்தாற்போல் இந்தப் பகுதியில் பிள்ளையார்பாளையம், அரக்கோணம் சாலை, சாலபோகம், பஞ்சுப்பேட்டை, பாக்குப்பேட்டை, புத்தேரி, கீழம்பி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் செயல்படுகின்றன.

இந்த ஆலைகளின் புகைப்போக்கிகளில் சல்லடைகள் அமைக்கப்பட்டு, அதில் கரித்துகள்கள் வடிகட்டப்பட்ட பிறகே புகை வெளியேற வேண்டும். இந்தச் சல்லடையில் படியும் கரித்துகள் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். சிலர் இந்தக் கரித்துகள்களை விவசாய நிலங்களுக்கு உரத்துக்கு பதிலாகவும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், பல அரிசி ஆலைகளில் இந்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் கறித்துகள்கள் அப்படியே காற்றில் பறந்து வருகின்றன. இது சாலையில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் விழுகின்றன. இந்த கரித்துகள்கள் கண்களில் விழுந்தவுடன் கண்களை கசக்கினால் மிகுந்த தொல்லை ஏற்படுகிறது. இதனால் பெரும் பாதிப்புகள் உருவாகின்றன.

இந்த ஆலைகளில் இருந்து பறக்கும் கரித்துகள்கள் வீடுகள், வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துவைத்து காய வைக்கப்படும் துணிகள் ஆகியவற்றின் மீதும் படிகின்றன. காஞ்சிபுரத்தில் பட்டுத் தொழிலும், அப்பளத் தொழிலும் அதிகம் நடைபெறுகின்றன. பட்டுப் புடவை நெய்யும்போதும், அப்பளம் உலர வைக்கும்போதும் கரித்துகள்கள் படிவதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அரிசி ஆலைகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். உரிய உரிமம் இல்லாமல் செயல்படும் ஆலைகள், விதிகளைப் பின்பற்றாத ஆலைகள் ஆகியவற்றை விதிகளை பின்பற்றவும், உரிமம் பெறவும் வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து விதிகளைப் பின்பற்றாத நவீன அரிசி ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறும்போது, “இந்த அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்கள் விவசாய பயிர்கள் மீது படித்து பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. அதேபோல் இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேறுவதால் அருகில் உள்ள நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்கள் கண்ணில் விழுந்தால் கண்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது” என்றார்.