‘பிக் பாஸ் சீசன் 3’.. கமல்ஹாசன் ரெடி!

கடந்த 2 ஆண்டுகளைப் போல, இந்த ஆண்டும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா, இல்லையா? என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சிக்கான போட்டோஷூட் மூலம் இதற்கு விடை அளித்துள்ளது விஜய் தொலைக்காட்சி.

அரசியல் பயணத்தில் தீவிரமாக இருக்கும் அதே முறுக்குமீசை கெட்டப்பில்தான் இம்முறை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் கையில் எடுக்கிறார். அதற்கான போட்டோஷூட் நடந்து முடிந்துள்ளது.  நிகழ்ச்சியின் முதல்கட்ட புரமோஷன் வேலைகள், விஜய் டிவியில் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. ஜூன் 2-வது வாரம் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

வழக்கம்போல சனி, ஞாயிறுகளில் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருப்பது, விவாதிப்பது, போட்டியாளர்களை கவனிப்பது ஆகியவை இந்த சீசனிலும் உண்டு. சென்னை பூந்தமல்லி சாலையில் அரங்கம் அமைக்கும் வேலையில் தற்போது ஒரு குழு முழுவீச்சில் இறங்கியுள்ளது. கடந்த முறை பிக் பாஸ் வீட்டில் அமைக்கப்பட்ட சிறை செட்டிங்குக்கு பதிலாக புதிய ஐடியா ஒன்றை யோசித்து, அதையும் உருவாக்கி வருகின்றனர்.

போட்டியாளர்களாக இம்முறை 16 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் யார் யார்? என்ற எதிர்பார்ப்போடு, ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.