மல்யுத்தத்தில் மகுடம் சூடிய மாணவிகள்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் மல்யுத்தத்துக்கு தனி இடம் உண்டு. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் இது பிரசித்தி பெற்றுள்ளது. ஆண்களுக்கே உரித்தானது என்று கருதிக் கொண்டிருந்த மல்யுத்தப் போட்டியில்,  தற்போது பெண்களும் சாதித்து வருகின்றனர்.

இந்த வகையில், சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள், மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அண்மையில்  நடந்த மாநில அளவிலான மல்யுத்தப்  போட்டியில், சேலம்  அரசு மகளிர் கலைக் கல்லூரி  மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதில், 59 கிலோ எடைப் பிரிவில் இக்கல்லூரி மாணவி ஹரிப்பிரியா, 65 கிலோ எடைப் பிரிவில் காயத்ரி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். 50  கிலோ எடைப் பிரிவில் மாணவி கௌசல்யா தங்கம் மற்றும் வெண்கலம், 55 கிலோ எடைப் பிரிவில் மாணவி துளசிமாலினி தங்கம் மற்றும் வெண்கலம், 65 கிலோ எடைப்  பிரிவில் மாணவி தவமணி  இரண்டு வெள்ளிப்  பதக்கம், 65 கிலோ எடைப் பிரிவில் மாணவி சுபஸ்ரீ  வெள்ளி மற்றும் வெண்கலம், 50  கிலோ எடைப் பிரிவில் மாணவி காவியா வெண்கலம் பதக்கங்களையும் வென்றுள்ளனர். இவர்களில், ஹரிப்பிரியா, காயத்ரி, துளசிமணி ஆகியோர் தேசிய அளவிலான மல்யுத்தப்  போட்டியில் பங்கேற்கத்  தகுதி பெற்றுள்ளனர்.

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப்  பதக்கம் பெற்றதற்காக, கல்லூரி முதல்வர் ரங்கநாதன், உடற்கல்வி இயக்குநர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற மல்யுத்தம் முதன்முதலில் இந்தியாவில் தோன்றியது என்பதற்கான பல சான்றுகள் புராணங்களில் உள்ளன. சங்க இலக்கியப் பாடல்களிலும் மல்யுத்தம் தொடர்பான குறிப்புகள் உள்ளன.

உலக அளவில் மல்யுத்தம், மற்போர், குஸ்தி  என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வீர விளையாட்டு, 4,000 ஆண்டுகளாக விளையாடப்படுகிறது.

எகிப்தில் பேனி ஹாசன் என்னும் இடத்தில், சுவரில் எழுதப்பட்ட பழைய சான்று உள்ளது. அதற்குப் பின்னர்,  கிரேக்கர்கள் வெளியிட்ட நாணயங்கள், பானைகள், சிலைகளில் இது தொடர்பான ஓவியங்கள் உள்ளன. இவையனைத்தும் 2,500 ஆண்டுகள் பழமையானவை.

இந்தியாவைப் பொறுத்தவரை, மகாபாரதத்திலேயே மல்யுத்தம் உள்ளது. கிருஷ்ணரும், அவரது அண்ணன் பலராமனும் பல மல்லர்களுடன் மோதி, அவர்களை வீழ்த்தியதை புராண, இதிகாசங்கள் மூலம் அறியமுடிகிறது.

கண்ணன் மல்யுத்தப் போரில்  கம்சனை அழித்ததாகவும், ராமாயண காலத்தில் வானரங்களான வாலி- சுக்ரீவன் மல்யுத்தம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, எகிப்தியர்கள், கிரேக்கர்களுக்கு முன்பே, மல்யுத்தத்தைப் பயின்றவர்கள் இந்தியர்கள் என்று நாம் பெருமை கொள்ளலாம்.