மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 3 போலீஸார் சஸ்பெண்ட்: நெல்லை எஸ்பி நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 போலீஸார் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் போலீஸ் என்று 3 பேரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் உத்தரவிட்டுள் ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. சுரண்டை, வீரகேரளம்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவியர் இங்கு பயில்கிறார்கள். மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் சிலர், கல்லூரி மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு, அதில் தொடர்பு கொண்டு தவறாக பேசியுள்ளனர். மேலும், பாலியல்ரீதியாகவும் தொல்லை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, சுரண்டை போலீஸில் மாணவிகளும், அவர் களது பெற்றோரும் புகார் அளித்தனர். இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, இதுபற்றி விசாரிக்குமாறு ஆலங்குளம் டிஎஸ்பி சுபாஷிணிக்கு, மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் உத்தரவிட்டார்.

டிஎஸ்பி மேற்கொண்ட விசாரணையில், மாணவிகளிடம் போலீஸார் அத்துமீறியது தெரியவந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 போலீஸாரையும், பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ் காரர்கள் முருகேசன் (28), கண்ணன் (27) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் போலீஸ் சரஸ்வதி (33) ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. நேற்று உத்தரவிட் டுள்ளார்.