மும்பையுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்?: சிஎஸ்கே – டெல்லி இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் இன்று விசாகப்பட்டினத்தில் மோதுகின்றன.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் பரபரப்பான வகையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதி சுற்று 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ள மற்றொரு அணியைமுடிவு செய்யக்கூடிய 2-வது தகுதி சுற்று ஆட்டம் இன்று இரவு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான அனுபவ வீரர்களை உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், இளம் வீரர்களை கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் 18 புள்ளிகளை பெற்ற போதிலும் அந்த அணியை முதல் இரு இடங்களுக்குள் வரவிடாமல் தடுத்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய பங்கு வகித்திருந்தது. ஏனெனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்ததால் மொத்த ரன்ரேட் விகிதத்தில் சுணக்கம் கண்டிருந்தது.

எனினும் 6 வருடங்களுக்குப் பிறகு  முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்திருந்த டெல்லி கேபிடல்ஸ், எலிமினேட்டர் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஒரு பந்து மீதம் இருக்கையில் பதற்றமான வகையில் ‘த்ரில்’ வெற்றியை வசப்படுத்தியது. 163 ரன்களை துரத்திய இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இலக்கை துரத்தும் சமயங்களில் தனது மிரட்டலான பேட்டிங்கால் மிகப் பெரிய அளவிலான வித்தியாசத்தை ரிஷப் பந்த் காட்டுவது அணிக்கு அசுர பலம் சேர்க்கிறது. ஆனால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனில் ரிஷப் பந்த் சற்று தேக்கம் அடைவது தொடர் கதையாக உள்ளது.

இறுதிக்கட்ட ஓவர்களில் அவர்,அதிரடியாக விளையாடி அணியைவெற்றிப் பாதைக்கு அருகில் கொண்டுசென்று விட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். அவர், ஆட்டமிழந்த பிறகு எளிதாக இலக்கை அடையும் சூழ்நிலை நிலவும் சமயங்களிலும் கூட அணி தடுமாற்றம் காண்கிறது. இது மட்டுமே ரிஷப் பந்த் மீது விழும் கடும் விமர்சனங்களாக இருக்கிறது.

இதற்கு இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த், விடைதேடக்கூடும்.  எலிமினேட்டர் ஆட்டத்தில் மற்றொரு இளம் வீரரான பிரித்வி ஷாவும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த3 ஆட்டங்களிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த பிரித்வி ஷா 38 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தார். பவர் பிளேவில் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடுவது அணியின் வலுவை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.

இன்றைய ஆட்டம் நடைபெறும் ஆடுகளத்தின் தன்மையை டெல்லி கேபிடல்ஸ் அணி அறிந்து வைத்திருப்பது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. முன்னணி வேகப் பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா இல்லாத நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இஷாந்த் சர்மா, டிரென்ட் போல்ட் ஆகியோர் திருப்திகரமாக செயல்பட்டனர்.

இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட கீமோ பால் முக்கியமான கட்டங்களில் விக்கெட்களை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்திருந்தார். அதேவேளையில் சுழற்பந்து வீச்சில் மூத்தவீரரான அமித் மிஸ்ரா ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அதிரடி வீரரான மார்ட்டின் கப்தில் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

விசாகப்பட்டினம் ஆடுகளமானது சேப்பாக்கம் ஆடுகளம் போன்று சுழலுக்கு சாதகமானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இம்முறை எளிதாக கையாளக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான ஆட்டம் என்பதால் முக்கியமான தருணங்களில் பதற்றம் அடையாமல் இருப்பதில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

3 முறை சாம்பியன் பட்டம், 4 முறை 2-வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஆட்டத்தின் முக்கியமான தருணங்களை அனுபவத்தால் வென்றெடுக்கும் திறனை கொண்டிருப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வலுவாக திரும்பி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைப்பதில் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

தொடக்க வீரரான ஷேன் வாட்சன் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 96 ரன்கள் விளாசி கவனத்தை ஈர்த்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அவரிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. மேலும் பவர் பிளேவில் அதிக பந்துகளை வீணடிக்கும் அவர், ரன்கள் சேர்க்க  திணறுவது அணியின் செயல் திறனை பாதிப்பதாக உள்ளது.

மற்றொரு தொடக்க வீரரான டு பிளெஸ்ஸியிடம் இருந்தும் தொடர்ச்சியான சிறந்த பங்களிப்பு வெளிப்படுவதில்லை. டாப் ஆர்டரில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, விரைவிலேயே எளிதாக விக்கெட்டை பறிகொடுப்பது நடுவரிசை பேட்டிங்கை கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது.

கேதார் ஜாதவ் இடத்தில் களமிறங்கும் முரளி விஜய்யிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. அம்பதி ராயுடு சீராக ரன்கள் சேர்த்து வந்தாலும் பேட்டிங்கில் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த சுமையும் தோனி மீதே விழுகிறது. மேலும் இறுதிக்கட்ட ஓவர்களில் தோனி, காட்டடி அடித்தால் மட்டுமே பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்ததும், பேட்ஸ்மேன்களின் குறைகளை தோனி அழுத்தமாக சுட்டிக்காட்டிஇருந்தார். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு பேட் செய்ய வேண்டும், ஏராளமான அனுபவத்தை கொண்டுள்ள பேட்ஸ்மேன்கள் அதை களத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும், ஷாட் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தோனி அறிவுறுத்தியிருந்தார்.

இதை இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் கவனத்தில் கொண்டு உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடும்.

அணிகள் விவரம்

டெல்லி கேபிடல்ஸ்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவண், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, காலின் இங்க்ராம், மன்ஜோத் கர்லா, ஷேர்பான் ரூதர்போர்டு, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், பண்டாரு ஐயப்பா, ஹர்ஷால் படேல், இஷாந்த் சர்மா, நது சிங், சந்தீப் லமிசான், டிரென்ட் போல்ட், அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், காலின் மன்றோ, ஹனுமா விகாரி, ஜலஜ் சக்சேனா, கீமோ பால், ராகுல் டிவாட்டியா, அங்குஷ் பெயின்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், ஸ்காட் குக்கேலீன், தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

நேரம்: இரவு 7.30

இடம்: விசாகப்பட்டினம்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்