மும்பை கேட்: மீண்டும் ‘விக்கி டோனார்’ ஜோடி

மீண்டும் ‘விக்கி டோனார்’ ஜோடி

‘விக்கி டோனார்’ படத்தின் பிரபல ஜோடியான ஆயுஷ்மான் குரானா, யமி கவுதம் ஜோடி ‘பாலா’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். அமர் கவுசிக் இயக்கும் இந்தப் படத்தில் நடிகை பூமி பேட்நேகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளமையிலேயே வழுக்கைத் தலையாகிவிடும் ஓர் இளைஞனின் கதையை இந்தப் படம் பதிவுசெய்கிறது. இதில், ஆயுஷ்மானின் காதலி கதாபாத்திரத்தில் யமி நடிக்கிறார். யமி, சூப்பர் மாடலாகவும் பூமி சாதாரணக் குறுநகரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணாகவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

‘பாலா’ திரைப்படம் ஒரு பொழுதுபோக்கான காதல் கதையாக இருக்கும் என்று இயக்குநர் அமர் கவுசிக் தெரிவித்திருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரன்வீர் கடந்துவந்த பாதை

ரன்வீர் சிங், பாலிவுட்டில் தான் கடந்த வந்த பாதையைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரும்பிப் பார்த்திருக்கிறார். இதுவரை தான் நடித்த முக்கிய கதாபாத்திரங்களை இணைத்து ஒரு படத்தை ரன்வீர் பகிர்ந்திருக்கிறார்.

‘பத்மாவத்’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘லூட்டேரா’ போன்ற அனைத்துக் கதாபாத்திரங்களையும் இணைத்து இந்தப் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். இந்தப் படம் அவருடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ரன்வீர் சிங், தற்போது ‘1983’ திரைப்படத்தில் நடிப்பதற்குத் தயாராகிவருகிறார். 

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படவிருக்கிறது. இந்தப் படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்குகிறது.