மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான்  உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் 1944-ம் ஆண்டு தோப்பில் முஹம்மது மீரான் பிறந்தார். நாவல் மொழி, கதை சொல்லும் விதம், வடிவ நேர்த்தி என படைப்பில் தனித்துவம் கொண்டவர். கடற்புர இஸ்லாம் சமூகத்தின் அகவுலகை முதன்முறையாகப் படைப்பாக்கிய முன்னோடி ஆளுமை தோப்பில் முஹம்மது மீரான் என்றால் அது மிகையாகாது.

தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவராகக் கருதப்படும் மீரான், கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள – தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.

‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’, ‘கூனன் தோப்பு’ ஆகியவை மீரானின் சாதனைப் படைப்புகள். இவரது முதல் சிறுகதை வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ளன. மீரானின் சாய்வு நாற்காலி என்ற நாவல், 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவர் கிட்டத்தட்ட 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். 

மீரான் சமீபத்தில் எழுதி வெளியான ‘குடியேற்றம்’ நாவல் தவிர மற்ற எல்லா நாவல்களுக்கும் விருதுகள் கிடைத்தன. கிணறு குறித்து ஒரு நாவலை எழுதி வருவதாக அவர் சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தோப்பில் முஹம்மது மீரான் இன்று அதிகாலை திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் காலமானார். அவரது உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் மீரான் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

மீரானுக்கு ஜலீலா மீரான் என்ற மனைவியும் ஷமீம் அகமது, மிர்ஷாத் அகமது என்ற மகன்களும் உள்ளனர். தமிழின் மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீரான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.