லாரி ஓட்டுநர் கொலையில் மனைவி கைது; ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரி, முதலியார்பேட்டை நுாறடிச் சாலை, வட்டார போக்குவரத்து அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் இடையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 6-ம் தேதி சந்தேகிக்கும் வகையில் கிடந்த சாக்கு மூட்டை குறித்து முதலியார்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீஸார் மூட்டையை பிரித்து பார்த்தபோது, 35 வயது மதிக்கத் தக்க இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லித்தோப்பு பெரியார் நகர் லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பது தெரிய வந்தது. கொலை தொடர்பாக கமலக்கண்ணன் மனைவி ஸ்டெல்லாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.இதைத் தொடர்ந்து முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீஸார் ஸ்டெல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ஸ்டெல்லா கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:

ஆண் நண்பர்களுடன் பழகியதால், என் கணவர் கமலக்கண்ணன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அவரது துன்புறுத்தல் அதிகமானதால், கொலை செய்ய திட்டமிட்டேன்.

எனது திட்டத்தை என் சகோதரி பிள்ளைச் சாவடியைச் சேர்ந்த ரெஜினாவிடம் கூறினேன். அவரது திட்டத்தின்படி கடந்த 4-ம் தேதி கமலக்கண்ணனை பிள்ளைச்சாவடிக்கு வரவழைத்து, பழச்சாற்றில் விஷம் கலந்து கொடுத்தேன். மயங்கி விழுந்த கமலக்கண்ணனை, பெரியார் நகர் வீட்டிற்கு கொண்டு வந்தோம். அங்கு, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அப்படியே விட்டால் உயிர் பிழைத்து விடுவார் என்பதால், ரெஜினாவின் நண்பரான சக்தி நகரை சேர்ந்த ரவுடி தமிழ்மணியை அழைத்தோம். அவர் வந்து கமலக்கண்ணன் வாய் மற்றும் மூக்கில் துணியை வைத்து அழுத்தியும், காலால் மிதித்தும் கொலை செய்தார்.

மறுநாள் 5-ம் தேதி இரவு, தமிழ்மணி அவரது நண்பர்கள் இருவரை அழைத்து வந்து, கமலக்கண்ணன் உடலை சாக்குமூட்டையில் கட்டி, மொபைட்டில் கொண்டு சென்று, ஆர்டிஒ அலுவலகம்-வட்டாட்சியர் அலுவலகம் இடையே உள்ள கால்வாயில் வீசி விட்டு சென்றதாக ஸ்டெல்லா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஸ்டெல்லாவை கைது செய்த போலீஸார், அவரது சகோதரி ரெஜினா, ரவுடி தமிழ்மணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.