வடகொரியாவின் செயல் யாரையும் மகிழ்ச்சியடையவில்லை: ட்ரம்ப்

இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ள வடகொரியாவின் செயலால் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறுகிய தூரம் சென்று இலக்கைத் தாக்கும் இரண்டு ஏவுகணைகளை வியாழக்கிழமை வடகொரியா பரிசோதித்தது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டர்ம்ப் கூறும்போது, ”வடகொரியா நடத்தியுள்ள இரண்டு ஏவுகணை சோதனைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வடகொரியாவின் செயலால் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுந்திருந்து பார்ப்போம். அவர்கள் பேச்சுவார்த்தை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாரா என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

வடகொரியா வியாழக்கிழமை நடத்திய ஏவுகணை சோதனைகளுக்கு இடையே  அந்நாட்டுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீபன் தென்கொரியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைக்காக சியோல் சென்றுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலில் வடகொரியா ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.