வேட்பு மனு நிராகரிப்பு விவகாரம்: தேஜ் பகதூரின் மனு தள்ளுபடி

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக தமது வேட்புமனுவை தேஜ் பகதூர் அண்மையில் தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு, அவரை தமது வேட்பாளராக சமாஜ்வாதி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, அக்கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான மற்றொரு வேட்பு மனுவையும் தேஜ் பகதூர் சமர்ப்பித்தார்.

ஆனால், அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அவரது இரண்டு வேட்பு மனுக்களிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், கடைசியாக தாக்கல் செய்த வேட்பு மனுவில், தான் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனை எதிர்த்து தேஜ் பகதூர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “தேஜ் பகதூரின் கோரிக்கையை ஏற்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பிஎஸ்எப் துணை ராணுவப் படையில் பணியாற்றி வந்த தேஜ் பகதூர், தங்களுக்கு தரம் குறைந்த உணவு வழங்கப்படுவதாக கூறி, 2017-ம் ஆண்டு ஒரு காணொலியை வெளியிட்டார். அதன்பின், 2018-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.