ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.6 கோடியில் 15 குளங்களை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.6.16 கோடி செலவில் 15 குளங்களை சீரமைத்து, சுற்றுச்சுவர், ஓய்வு இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கவும், மழைநீர் கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கவும், அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று நீரியல் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மாநகராட்சி நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் சிலவற்றை தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியைக் கொண்டு சீரமைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி சில நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 15 குளங்களை சீரமைக்க திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தூர் வாருதல், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீரை குளத்துக்கு கொண்டுவந்து சேகரிக்கும் கட்டமைப்பு, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவது, சுற்றிலும் அமர்வதற்கான இருக்கைகள், சோலார் விளக்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக ரூ.6.16 கோடி செலவில் 15 நீர்நிலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான விரிவான திட்டஅறிக்கையை தமிழ்நாடு குடிநீர்முதலீட்டு நிறுவனம் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக இதற்கான நிதி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.